நுவரெலிய அரச நிறுவனங்களில் தமிழ் மொழி புறக்கணிப்பு! - தொழிலாளர் தேசிய சங்கம்
நுவரெலியாவில் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான எம்.உதயகுமார் குற்றம் சுமத்தியுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்களில் அரச கரும மொழியான தமிழ் மொழி உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால் தமிழ் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதால், இவ் விடயம் குறித்து பொறுப்பு வாய்ந்த தரப்புக்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார். இவ் விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
'நுவரெலியா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்கள், கல்விப் பணிமனைகள், பிரதேச செயலகங்கள், வைத்தியசாலைகள், தொழில் திணைக்கங்கள்;, நீதிமன்றங்கள் உட்பட பல்வேறு அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கல் உரிய வகையில் நடைமுறைப்படுத்தப்படாத காரணத்தினால் தமிழ் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குக் கடந்த பல வருடங்களாக உள்ளாகி வருகின்றனர்.
தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் அரச கரும மொழியான தமிழ் மொழி உரியவகையில் அமுல் படுத்தப்பட வேண்டுமென அரசாங்கத்தினால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள போதும் இந்த அமுல் படுத்தல் இதுவரை நடை முறைக்கு வரவில்லை.
குறிப்பிட்ட அரச நிறுவனங்களில் தமிழ் மொழியில் சேவையாற்றக் கூடிய அதிகாரிகளுக்கான பற்றாக்குறை காணப்படுவதால் இத்தைய நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கல் உரிய வகையில் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது.
எனவே தமிழ் அதிகாரிகள் போதுமானதாக உள்ள அரச நிறுவனங்களில் கூட தமிழ் மொழி அமுலாக்கப்படுவதில் அசமந்தப் போக்கு கடைப்பிடிப்படுவது விசனத்துக்குரிய விடயமாகும்.
அரச நிறுவனங்களில் தமிழ், சிங்கள மக்களின் நலன் கருதி சிஙறிலங்காவின் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட சமூகத் தொடர்பாடல் வசதியளிப்பாளர் நியமனங்கள் கூட தற்போது வழங்கப்படுவதில்லை.
இந் நிலையில் இன்று பெருந்தோட்டப்பகுதியில் படித்து விட்டு தொழில் வாய்ப்பின்றி உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு அரச கரும மொழி தொடர்பான பயிற்சிகள் மற்றும் ஏனைய பயிற்சிகளை வழங்கி அவர்களுக்கு உரிய நியமனங்களை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முன்வரவேண்டும்.
இத்தகைய நியமனங்கள் ஊடாக நுவரெலியா மாவட்டத்தில் அரச நிறுவனங்களில் தமிழ் மொழி அமுலாக்கலைப் பூர்த்தி செய்யக் கூடியதாக இருக்கும்.
இவ் விடயத்தினை உரிய தரப்பினர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்' என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், மத்திய மாகாண சபை உறுப்பினருமான எம்.உதயகுமார் கூறியுள்ளார்.